தாலாட்டுப் பாடல்

கழுகுமலையில் வாழ்ந்த என் தாய் சூசையம்மாள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன். இவை பல வேளைகளில், பல சூழல்களில் அவர் பாடியவை. கல்வி கற்காதவராக இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் நாம் நினைவு கூர்ந்து பாடி மகிழத் தக்கவை. ஒவ்வொரு சரணத்தைப் பாடி முடித்ததும் ராராரோ என்றோ அல்லது ஆராரோ என்றோ பாடி அடுத்த அடியைத் தொடங்குவார்.

தாலாட்டுப் பாடல்

ராராரோ ராரிரரோ – என்

ராசாவே ராரிரரோ

ராசியாக வந்த எங்கள்

ராசாவே ராரிரரோ

                      ஆராரோ ஆரிரரோ – தொட்டில்

                      ஆட்டுகிறேன் ஆரிரரோ

                      ஆச்சிபாடும் பாட்டைக்கேளு

                      ஆராரோ ஆரிரரோ

தங்கமான தொட்டிலே

தனித்து நீ படுத்துறங்கு

தவத்தாலே வந்தவனே – என்

தாலாட்டைக் கேட்டுறங்கு

                     அம்மாவரும் நேரம்வரை

                     ஆச்சிதானே உனக்குத்துணை

                     அந்தநேரம் வரும்வரை

                     அசையாமல் படுத்துறங்கு

பட்டப்பகல் வேளையிலே

கட்டாயம் தூங்கணுமே – உன்

கிட்டத்திலே ஆச்சிருக்கேன்

கொட்டாவி விட்டுத் தூங்கு

                     குலம் தழைக்க வந்தவனே

                     நல்ல குணம் உள்ளவனே

                     எல்லோர்க்கும் நல்லவனே

                     வல்லவனே நீயுறங்கு

தெய்வம் தந்த நல்லகனி

தேசத்திலே சிறந்தகனி

தெவிட்டாத பிள்ளைக்கனி

தேம்பாமல் நீயுறங்கு

                     ஆளப் பிறந்தவனே

                     அழாமல் படுத்துறங்கு

                      நிலாவைப் பிடித்துத்தாரேன்

                      எழாமல் நீயுறங்கு

பேரழகு கொண்டஎன்

பேரப்பிள்ளை கண்ணுறங்கு

பேணிநானும் காப்பேனே

பேசும்கிளி நீயுறங்கு

                     எல்லோர்க்கும் சோறுதரும்

                     நல்லவராம் நாச்சியாரு – அந்த

                     நாச்சியாரு ஆச்சிவீடு

                    அழைத்துப் போறேன் நீயுறங்கு

சூசைஆச்சி பாடும்பாட்டை

ஆசையோடு கேட்டுறங்கு

ஆடாமல் அசையாமல்

அப்படியே படுத்துறங்கு

                    மத்தவங்க வேலைசெய்ய – என்

                   உத்தமனே நீயுறங்கு

                   மெத்தைபோன்ற தொட்டிலிலே

                   சத்தமின்றி நீயுறங்கு

சொகுசான தொட்டிலிலே

சுகமாகப் படுத்துறங்கு

சொன்னபடி கேட்கும் நீ

சொற்பநேரம் படுத்துறங்கு

                  உறக்கத்திலே வளர்வதாக

                  ஊராரெல்லாம் சொல்லுகிறார்

                  உயரமாய் வளர்வதற்கு

                  உறங்கிடுவாய் கண்மணியே

உனக்குப் பிடித்த உளுந்தவடை

உறுதியாய் வாங்கித்தாரேன்

உறங்கி நீ விழிக்கும்போது

உன்னிடத்தில் ஆச்சிதாரேன்

                     கேழ்வரகு மாவெடுத்து

                     பால்போலக் காய்ச்சிடுவேன்

                     பசியெடுத்து அழும்போது

                     பக்குவமாய்க் கொடுத்திடுவேன்

பச்சரிசிப் பொட்டு உனக்கு

கச்சிதமாய் வச்சிடுவேன்

உச்சியிலே பூவும்வச்சி

ஊருக்கெல்லாம் காட்டிடுவேன்

                     வெயிலுமிக அடிக்குதே

                    வேர்த்துமிகக் கொட்டுதே

                    வேகமாக ஆட்டுகிறேன்

                    வீசும்காற்றில் நீயுறங்கு

கோடைமழை போல நீயும்

கூப்பாடு போடாதே

அடைமழையின் அடக்கம்போல

அமைதியாய்ப் படுத்துறங்கு

                     காலமழை மூன்று மாதம்

                     கணக்குப்படி பெய்திடுச்சி

                     காணுமிட மெல்லாம் தண்ணீரு – உன்

                     கண்ணீர் எதற்கு கண்ணுறங்கு

தகரவீட்டில் மழைவிழுந்து

தடதடவெனக் கேக்குதே

தாளமென அதைநினைத்து – என்

தாலாட்டைக் கேட்டுறங்கு

                       விழித்து நீ எழுந்ததும்

                       குளித்து நீ முடிக்கணும்

                       துடைத்து உன்னை எடுத்ததும்

                       மணக்கும் புகை பிடிக்கணும்

ஆம்பல் ஊரணியின்

அழகையெல்லாம் பார்க்கணும்

ஆறுமுகன் கோவிலும்;

அழகுத் தெப்பமும் பார்க்கணும்

                     தேரோட்டத் திருவிழாவும் – சில

                     தினத்தில் வந்துவிடும்

                     தேரோடும் அழகையும்

                     தெருவில் நின்று பார்க்கணும்

காசியிலும் காணாத

மாசிமகத் திருவிழாவை

பேச்சில்தானே கேட்டிருப்பாய்

ஆச்சுனக்கு காட்டுகிறேன்

                     விதவிதமாய் கடைகள்வரும்

                     விசாகமென்னும் திருவிழா

                     விபரமாய் காட்டுகிறேன்

                     விழிக்காமல் நீயுறங்கு

வீரமாய் முருகனுமே

சூரனை வென்றவிழா

விரும்பினால் நீயுந்தான்

வருகையில் பார்க்கலாம்

                    நாட்டிலுள்ள மாடுகூடும்

                    மாட்டுச்சந்தை தாவணி – அதை

                    காட்டியுன்னை அழைத்துவர

                    கூட்டிப்போறேன் உறங்கு

மாதாகோவில் கோபுரத்தை

மறக்காமல் பார்க்கணும்

மனதிலதை நினைத்து நீயும்

மௌனமாய் படுத்துறங்கு

                      கழுகுமலை உச்சியில் ஒரு மரம் – அந்த

                      ஒருமரமும் உயர்ந்தபெரு புளியமரம்

                      புளியமர உச்சியில் ஒருகழுகு – அந்த

                      கழுகைக் கண்டு நீயுறங்கு

* * *

பின்னூட்டமொன்றை இடுக