வெள்ளிவிழா வாழ்த்து!

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

வெள்ளிவிழா நாயகன் குருவிகுளம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி

குருத்துவ வெள்ளிவிழா நாயகன்

குருவிகுளம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளாருக்கு

வாழ்த்துப் பா!

மலரில் மணமென மனதில் நினைவென மறைந்து

மனிதர் கட்புலன் காணஇயலா உருவிலா நிலையில்

மங்கா மாபெரும் ஆற்றல் தன்னுள் அடக்கி

மகிமை யோங்கும் இறைவா உம்தாள் போற்றி

 

விரிந்து பரந்த வளநிலம் எங்கும் கொண்டு

விளங்கும் புகழ் ஓங்கும் தஞ்சை மண்ணில்

இயேசு வழியில் ஈடிலாப் பணிசெய் யும்நல்

இனிய கும்பகோண மறைமா வட்ட மதில்

 

வாழையும் சோலையும் வளர்ந் தோங்கிக் காண

வாளைமீன் வாய்க்கால் வழியே துள்ளிப் பாய

வயலின் நாற்று பசுமை காட்டியே ஆட

வளப்பம் மிகுசூழல் தனில்அமைந் ததுசுக் காம்பார்

 

சுக்காம் பார்சுரந்த சுவைநீ ரெனஅவ் வூரில்

பக்தியில் தோய்ந்து சத்தியநெறி யில்சித்தம் சிதரா

உத்தமர் ஞானமணி மைக்கேல் இருவர் தவத்தால்

இத்தரணி யுதித்தார் ஆரோக்கிய சாமி அடிகளார்

 

மாயவுலகு இன்பம் மணியோ சையென மறையும்

மாசிலா ஏசுபணி மங்கா இன்பம்தரு வதறிந்து

நாடெல் லாம்நற் பணிநலிந் தோர்க்குச் செய்யும்

நார்பர்ட் சபையில் நதிகடல் புகுதலெனக் கலந்தார்

 

ஏழ்மை எளிமை தாழ்ச்சி யெலாம் தனதாக்கி

வாழ்வை வையகத் தார்வளம் பெற உழைத்து

தேகசுகம் தேடாது தேவன்சுவை தெரிந்ததில் திழைத்து

தேசமதில் ஏசுவைப் பேசியே திசைபல சென்றார்

 

குருதரும் திருவருட் சாதனம் நிறைவாய்த் தந்து

பெருந்திரள் மக்களை திருச்சபை தனிலே சேர்த்தார்

ஆண்டுகள் பலதாண்டி அகண்டு ஓடவே இவர்

தூண்டிய விளக்கொளி யெனபுக ழில்ஒளிர லானார்

 

குருவிகுளம் புதுப்பங் கெனும்பட கிலெம்மை ஏற்றி

பெருஅலை யிலும்திற மையில் சீர்படச் செலுத்தி

பாங்குடன் காக்கும் படகோட்டி யாம்பங்குத் தந்தை

ஓங்குபுகழ் எங்கும் பொங்கிப் பரவி வளர்கவே

 

இறைபணி பொதுப்பணி எனஇரு பணியும் ஒருசேர

இருபத்தைந் தாண்டுகள் இடர்பல எதிர்த்து உழைத்து

சொல்லில் போற்றும் செழுங்கா வியமாய் இன்று

வெள்ளி விழாகண்டு விளங்கும் குருவே வாழ்க!

 

மலர்மாலை சூடினால் மாலையில் வாடும்என் றெண்ணி

மனமதில் பூத்தமகிழ் வாம்மாலை சூடியே உம்மை

மண்ணில் விண்ணின் தண்நிலவென புகழொளி வீசி

எண்ணிலா காலம் இப்பணி செய்துவாழ வாழ்த்துவமே!

* * *

Advertisements

செட்டிகுறிச்சி:அருள்மிகு வெயிலுகந்த அம்மனுக்குப் புகழ்ப்பா!

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

செட்டிகுறிச்சி:அருள்மிகு வெயிலுகந்த அம்மன்

வான்முட்டும் வேம்புயெங்கும் வரிசையிலே சூழ

கான்சிட்டு அதிலிருந்து கானமேதான் பாட

தேன்மொட்டு திறந்துமணம் திசைபரவி வீச

வான்தேவர் வந்துநின்று வாழ்த்திப்புகழ் கூற

              செந்தமிழ்ப் பாவலர் பாஎடுத்துப் படிக்க

              சுந்தர மானநல்ல செட்டிகுறிச் சியூரில்

              சிந்திடும் புன்னகை பொங்கியே பூக்க

              வந்துகோயில் கொண்ட வெயிலாச்சியே போற்றி!

மன்னவர் கட்டினார் பலகோயில் அன்று

மனமதில் கட்டினார் பூசலாரும் ஒன்று

குணமுயர் செட்டிகுறிச் சியூராரும் இன்று

தினம்காக்கும் தேவிவெயி லாச்சிக்கு என்று

              தனமில்லாத் தாழ்நிலையில் தளராது நின்று

              கணமேனும் துயிலாத கருத்துமே கொண்டு

              எறும்பென உழைத்துப்பெரும் பொருளுமே சேர்த்து

              விரும்பும் வரம்தந்திடும் வெயிலாச்சிக் கென்று

செட்டிகுறிச்சி:அருள்மிகு வெயிலுகந்த அம்மன்

திருக்கோவில் அமைத்துத்தான் திருவிழாவும் எடுத்து

மருவில்லா மனத்தாலே மணல் போலக் குவிந்து

அருள்தரத் தாழ்ந்துதான் அளவடியும் பணிந்து

இருகரம் குவித்தோமே இன்பமீவா யெமக்கு

              அணிமணிகள் அழகாக ஆலயத்தில் திகழ

               கனிவீழ்ந்து தரையெல்லாம் மறைத்துத்தான் மூட

               பிணிதீர்க்கும் செடிகொடிகள் செறிந்தங்கு காண

               நனிசிறக்கும் ஆலயம் நானிலத்தில் இதுவே

இருளான துன்பங்கள் எவைவந்த போதும் – உன்

அருளான பார்வையால் அகலுமே அவையும்

கருமுதல் காடுவரை காத்திடும் அம்மா– உன்

திருமுகம் காணவே திரண்டுள்ளோம் முன்னால்

              எண்திசை தேடியும் உன்போல உலகில்

             அன்பாலே அணைத்திடும் தெய்வமேது மில்லை

             விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியே நீயே– எம்

             கண்ணிற்குக் காட்சிதர கருணைசெய் வாயே!

வடதிசை அமர்ந்து வரம்தரும் தாயே– உன்

இடமதில் இருப்பதே இன்பமே எமக்கு – உன்

சுடர்முகம் கண்டாலே சுடும்எந்தன் நெஞ்சின்

இடரெல்லாம் பரிதிமுன் பனிபோல மாயும்

               முன்வினை தன்வினை எவ்வினையாவும் – உன்

               முன்னாலே வந்தாலே தன்னாலே ஓடும்

               நன்மலர்த் தூவியே நாளுமே வணங்க

               எண்ணில்லா நன்மைகள் திண்ணமாய்க் கூடும்

செட்டிகுறிச்சி:அருள்மிகு வெயிலுகந்த அம்மன்

வெயிலுக்கு உகந்தநல் நிழல்போல விளங்கும்

வெயிலுகந்த அம்மனும் நீதானே யம்மா– எம்

உயிருக்குள் கலந்துதான் ஒன்றான தாயே– சிறு

பயிர்போல எம்மையும் காப்பாயே நீயே!

              உத்தமராய் நாமிருந்து சுத்தமனத் தாலே

              நித்தமும் அன்னைபதம் சுத்தித்தொழு தாலே

              எத்தனை நலமுண்டோ அத்தனையும் தந்திடும்

              சத்தியத் தாயின்புகழ் எத்திசையும் வளர்கவே!

* * *

நல்லாசிரியர் விக்டருக்கு வாழ்த்து!

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

jvj

என்னுடைய மாணவரும்,
சென்னை – எருக்கஞ்சேரி,
நல்ல சமாரியன் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியருமான
திரு.சா.ஜான் விக்டர் ஜோசுவாஅவர்கள்,
05.09.2014 அன்றுதமிழ்நாடு அரசு வழங்கிய
“நல்லாசிரியர் விருது” பெற்றமைக்கு வாழ்த்து!

                                                               1.

                                       சிந்து நதிசீர் சிறப்பென

                                                    சிறப்பு கவிபாரதி கூற்றென

                                        இந்திய தேசமதில் திலகமென

                                                     இருந்து விளங்கும் சிற்றூருள்

                                        முந்தித் திகழ்ந்து முறையாய்

                                                     முதலிடம் பெறும் நல்லூர்

                                         சிந்தையில் இன்பம் சேர்க்கும்

                                                       செட்டிகுறிச்சி யூராம்!

                                                                 2.

                                         இந்த நல்ல ஊரிலே

                                                       இனிய நற்கல்வி தருவது

                                         இந்துநா டார்நடு நிலைப்

                                                        பள்ளி என்பது ஆகும்

                                         அந்த நாளில் பணிசெய்து

                                                       அதன்புகழ் வளர்த்த ஆசானுள்

                                         இந்த நாளும் இவ்வூரில்

                                                       இருக்கும் மரியதா சும்நானே!

                                                                   3.

                                         பழைய காலத்தலைப் பதிவுகளைப்

                                                       பிரித்தெ டுத்துப் பார்க்கிறேன்

                                         பாடம் கற்ற பலருள்ளும்

                                                       பணிந்து மதித்த மாணவர்

                                         பாசமிகு விக்டர் தானும்

                                                       பாங்காய் பாடம் பயின்று

                                         பாலுள் பதமென அறிவுபெற்று

                                                       பார்த்தோர் வியக்க உயர்ந்தார்!

                                                                   4.

                                          சென்னை சென்று அவருமே

                                                        சிறந்த ஆசிரியப் பணிதனை

                                          செய்ய நினைத்துத் தேடியே

                                                         செம்மை சிறப்பு நிறைந்து

                                           அள்ளக் குறையாது அளிக்கும்

                                                         அமுதசு ரபிபோல் கல்விதரும்

                                            நல்ல சமாரியன் தொடக்கப்

                                                          பள்ளிநாடி பணியில் சேர்ந்தார்.

                                                                     5.

                                            கல்வி கற்கும் சிறார்க்கு – பாடம்

                                                          கனியின் சுவையெனச் சொல்லி

                                            எல்லா மாணவரும் ஏற்றம்பெற

                                                          என்றும் நன்றாய் உழைத்தார்

                                            சொல்திறன் செயல்திறன் கண்ட

                                                          செழும்நம் தமிழக அரசும்

                                             நல்லாசிரி யர்விருது அவர்க்கு

                                                           நல்கியே பாராட்டுச் செய்தது.

                                                                       6.

                                              விரிநீர் உலகில் விக்டரும்

                                                          விருதுபெற்று விண்மீன் ஆனார்.

                                               பெரிதாம் பலபுகழ் மேலும்

                                                          பெருகு நிலவெனப் பெற்று

                                               பாரிக்கொடை போலவே கல்வியை

                                                           வாரிக் கொடுத்து பல்லாண்டு

                                                பாரினில் வாழநல் ஆசிகூறி

                                                            பாசத்தால் வாழ்த்து கின்றேன்!

* * *

இந்திய நாடு

‘செட்டிகுறிச்சி’ புலவர் அ.மரியதாஸ்

india-independence-day

ந்திய நாடு என்னுயிர் நாடு

இணை யில்லாத பொன்நிகர் நாடு

இணைந்து நாமும் வாழ்வோமே

இன்பம் நாளும் பெறுவோமே

 

அன்னியர் நம்மை ஆண்டபோது

கண்ணீர் சிந்தி வாழ்ந்தோமே

இன்னுயிர் ஈந்த முன்னோரால்

இன்ப சுதந்திரம் அடைந்தோமே

 

அன்று போல்இனி என்றுமே

அடிமை யாகிட மாட்டோமே

ஒன்று பட்டு நாமிதையே

என்றும் சேர்ந்து காப்போமே

 

சுதந்திரம் பெற்ற தாலேநாம்

சுகங்கள் பலவும் அடைந்தோமே

சோர்ந்தி டாது உழைப்போமே

சொர்க்க நாடாய் ஆக்குவோமே

 

நிலமும் கடல்நதி மலையும்

வளமாய் இங்கு அமைந்தனவே

நலமாய் பாது காத்தாலே

உலகோர் போற்றப் பெறுவோமே

 

அறிவியல் மருத்துவம் கல்விஆலை

அனைத்திலும் நன்கு வளர்ந்தோமே

அகிலம் கண்டு வியந்திடவே

அன்னை இந்தியா உயர்ந்திடுமே!

* * *

தேனமுது தேனீர்க் கடை

(டாக்டர்  ராதாகிருஷ்ணன் பற்றிய ஓர் அரங்க நாடகம்)

படைப்பு : புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

தேனமுது தேனீர்க் கடை

இடம் : டீ கடை                                         நேரம்: காலைப் பொழுது

கதாபாத்திரங்கள்:

                  1. காளிமுத்து (டீ கடைக்காரர்)

                  2. டீ குடிக்க வந்துள்ள நண்பர்கள் : சாம்பல் சிவம், தாளமுத்து

                  3.  புதிதாக வந்த ஒருவர்

                  4. டீ குடிக்க வரும் பிற வாடிக்கையாளர்கள்

தாளமுத்து      :      ஏ காளிமுத்து, காப்பிக்கடை திறந்து எவ்வளவு நேரம் ஆவுது, இன்னும் காலண்டர்ல தேதி கிழிக்கலையா?

கடைக்காரர்     :      நான் கிழிக்கலேங்கிறதுக்காக என்ன விடியாமலா போச்சு?

தாளமுத்து      :      ஏம்பா, இந்த ஏடாகூடப் பேச்சுத்தானே உன்னை விட்டுப் போக மாட்டிங்குது.

கடைக்காரர்      :     பின்ன என்னப்பா, காலையிலே எந்திரிச்சி முத்தம் தெளிச்சி, தண்ணியைக் காச்சி, பாலைக் காச்சி, டீயைப் போட்டு, காப்பியைப் போட்டு, வடையைப் போட்டு, பெஞ்செல்லாம் தொடச்சிப் போட்டு, எல்லாத்தையும் கழுவிப் போட்டு, அப்பப்பா… எத்தன எத்தன வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் . எனக்குக் கெடக்குற வேலையிலே காலண்டரை கிழிக்கலேங்கிறதுதான் கிழிஞ்சி போச்சாக்கும்.

(அப்போது, புதியவர் ஒருவர் கடைக்கு வருகிறார்)

கடைக்காரர்    :       வாங்க சார்! உங்களுக்கு என்ன வேணும்? டீயா காப்பியா?

புதியவர்       :      டீ கொடுங்க.

கடைக்காரர்     :     சீனி எப்படி?

புதியவர்      :      பாதி போடுங்க.

கடைக்காரர்     :     டேய், சாம்பல் சிவம்!

சாம்பல்சிவம் :      என்ன அண்ணே?

கடைக்காரர்      :     ஒன்னுமில்ல, அந்தக் காலண்டரிலே ஒரு தாளைக் கிழிச்சிரு

சாம்பல் சிவம் :      அண்ணே பல்லத் தேய்ச்சுட்டு கிழிச்சுடுதேன், கொஞ்சம் சாம்பல் தாங்க. (திருநீரு பாக்கட்டை எடுத்து சாம்பல் சிவம் கையில் கொஞ்சம் தட்டுகிறார்).

புதியவர்           :     (டீயை வாங்கிக் குடித்துக் கொண்டு) அது என்ன, சாம்பல் சிவமுன்னு பேரு சொல்றீங்க? சாம்பல் வச்சிப் பல் தேய்க்கிறதாலயா? இல்ல ஏற்கனவே இந்தப் பேரு தானா?

கடைக்காரர்     :     இவங்க குடும்பமே சிவக் குடும்பம் சார்.

புதியவர்           :       சிவக் குடும்பமா, அப்படினா…?

கடைக்காரர்     :     இவங்க குடும்பத்திலே எல்லார் பேரும் சிவம்னு முடியறாப்பலதான் பேரு வைப்பாங்க, என்ன தாளமுத்து?

தாளமுத்து      :     ஆமா சார்! அப்படித்தான். இவன் பேரு சாம்பல் சிவம்; இவன் தம்பி பேரு சதா சிவம், இவன் அண்ணன் பேரு சாந்தசிவம், இவன் அப்பா பேரு சந்தானசிவம், தாத்தா பேரு சக்திசிவம், தாத்தாவோட தாத்தா பேரு சத்தியசிவம். இப்படித்தான் சார் இவங்க குடும்பத்துல உள்ள அத்தன பேரும். அதனாலதானொழிய வேறு காரணம் இல்ல.

புதியவர்           :       மத்த பேரு எல்லாம் சரி தான்! ஆனா, சாம்பல் சிவம்கிறதுக்கு என்ன அர்த்தம்?

தாளமுத்து     :      டேய் சாம்பலு நீயே அர்த்தம் சொல்லுடா.

சாம்பல் சிவம் :    ஏலே தாள, ஒழுங்கா முழுப் பேரைச் சொல்லு. இல்லேனா  நான் தாளன்னு தான் சொல்லுவேன்.

தாளமுத்து    :      சரி சரி முழுப் பேரு சொல்லுதேன். சார் கேட்டாங்களே,

உன் பேருக்கு என்ன அர்த்தமுன்னு நீயே சொல்லு.

சாம்பல் சிவம் :      சார் இந்தப் பேருல ரொம்ப அர்த்தம் இருக்கு சார். இது சிவன் பேரு

தாளமுத்து     :      டேய்! சாம்பலுங்கிறதா சிவன் பேரு?

சாம்பல் சிவம் :      ஆமாண்டா, உனக்கு என்னடா தெரியும்? சும்மா கிடடா. சார் சிவன்

உடம்பெல்லாம் சாம்பல் பூசி இருப்பாருல்ல, ஆகவே அவருக்கு சாம்பல் சிவமுன்னு ஒரு பேரும் உண்டு. அதுதான் சார் என் பேரு.

புதியவர்           :      ஆமாம் தம்பி! நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் உங்ககிட்ட இன்னொன்னு கேட்கணும்னு நினைக்கேன்.

சாம்பல் சிவம் :      சும்மா எதுவாயிருந்தாலும் கேளுங்க சார்.

புதியவர்            :      வேறொன்னும்மில்ல… இந்த நவீன காலத்துல சாம்பல் வச்சி பல் தேய்க்கிறீர்களே, அதுக்கு எதுவும் காரணம் உண்டா?

சாம்பல் சிவம் :      பலகாரணம் இருக்குது சார். ஒன்னு, சாம்பல் சிவனைக் குறிக்குது. இன்னோன்னு என்னன்னா? சாம்பலானது மனித வாழ்வு நிலையற்றது. இறந்தபின் எல்லா மனுசனும் சாம்பலாத்தான் ஆகுதான் என்ற மிகப் பெரும் தத்துவத்தக் கூறுது. அடுத்து, சாம்பல் ஒரு கிருமி நாசினி. அந்தக் காலத்துல பயிர்களுக்குப் பூச்சி விழுந்தா சாம்பலைத்தான் தூவுவாங்க. மேலும், சாம்பல் அழுக்கை நீக்கி பளபளப்பா வைக்கக் கூடியது. இதை வச்சி தேய்ச்சுத்தான் நம் முன்னோர்கள் 80, 90 வயது ஆகியும் சொத்தைப் பல் இல்லாம செத்துப் போகும் வரைக்கும், நொறுக்கு நொறுக்குன்னு முறுக்கைத் தின்னு முறுக்கா இருந்தாங்க!

கடைக்காரர்   :        சாம்பல்ல இவ்வளவு விஷயம் இருக்கா?

புதியவர்          :        நல்லா சொன்ன தம்பி!

(சாம்பல் சிவம் பல் தேய்த்துவிட்டு காலண்டரில் ஒரு தாள் கிழித்து தூரப்போடப் போகிறான்)

தாளமுத்து    :        டேய் காலண்டர்லே தாளக் கிழிச்சிட்டு தூரப் போடக் கூடாதுடா?

சாம்பல் சிவம் :      தூரப் போடம வாய்குள்ள போட்டு திங்கணும்கியா?

தாளமுத்து      :    அது இல்லேடா. அதுலே என்ன எழுதியிருக்குன்னு படிச்சிப் பாத்துட்டு போடணும். ஏன்னா அதுல பொன்மொழி போட்டிருப்பாங்க. சரி, இன்னிக்கு என்ன போட்டிருக்குன்னு பாரு?

சாம்பல் சிவம் :      பொன்மொழி ஒன்னும் இல்லியே.

தாளமுத்து      :     இல்லியா, அப்படி இருக்காதே. ஏதாவது போட்டிருப்பாங்க, நல்லா பாரு.

சாம்பல் சிவம் :      (அரைகுறையாகப் படித்து விட்டு) ஏதோ டாக்டருக்குப் பிறந்த தினமாம்.

தாளமுத்து       :      டாக்டருக்கு பிறந்த தினமுன்னா இதுல எதுக்கு போடுதாங்க?

கடைக்காரர்     :    ஏதாவது பெரிய டாக்டரா இருக்கும். அதான் போட்டிருக்காங்க.

தாளமுத்து      :     எவ்வளவு பெரிய டாக்டரா இருந்தாலும் இதுல போட மாட்டாங்க ஏலே! அரைகுறை, நல்லா முழுசாப் படிடா.

சாம்பல் சிவம் :        டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமாகிய ஆசிரியர் தினம்.

தாளமுத்து       :   பாத்தியா, இவ்வளவு போட்டிருக்கு, நீ என்னன்னா? காண்ட்ராக்டுக்கு களை புடுங்குன மாதிரி படிக்க!

சாம்பல் சிவம் :      சரி அதை உடுப்பா. இவரு எந்த நோய்க்கு ஸ்பெஷலிஸ்டு? எந்த ஊர்லே ஆஸ்பத்திரி வச்சிருக்காரு? ஒரு விவரமும் இல்லியே?

தாளமுத்து      :    அட கூமுட்டையிலும் கூடு உடைஞ்ச கூமுட்ட, நீ நினைக்கிறாப்ல இவரு ஆஸ்பத்திரியிலே இருக்குற டாக்டர் கிடையாது.

சாம்பல் சிவம் :      பின்னே?

தாளமுத்து      :      இவரு நம் நாட்டின் குடியரசுத் தலைவர். அதாவது ஜனாதிபதியா டெல்லியிலே இருந்தவரு. இந்த டாக்டர் ராதாகிருஷ்ணனைத் தெரியாதுங்கிறீயே? கேவலம்! கேவலம்!

சாம்பல் சிவம் :     இதுல என்ன கேவலம் வாழுது? அவருவாட்டு டெல்லியிலே போயி இருந்த யாருக்கு தெரியும்?

தாளமுத்து      :    பிறகு எங்க இருந்தா தெரியுமுங்கிற?

சாம்பல் சிவம் :   நல்லாச் சொன்ன, ஒரு சினிமாவிலே கினிமாவிலே நடிச்சிருக்கணும், இல்லேன்னா, டி.வி நாடகத்திலயாவது நடிச்சிருக்கணும். அப்படின்னா  எல்லாத்துக்கும் நல்லாத் தெரியும். அதை விட்டுப் போட்டு டெல்லியிலே போயி இருந்தா யாருக்குத் தெரியும்?

தாளமுத்து     :    சே, என்ன அநியாயமாய்ப் போச்சி, உடுப்பு இருக்கிறது இடுப்புக்கு தெரியாம போச்சுங்கிற மாதிரி இருக்கு. தலைவிதி! நம் நாட்டுக்கு ஜனாதிபதியாயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பற்றி தெரியாதுங்கிறீயே?

சாம்பல் சிவம் :        இந்தா, இங்கே பாரு! உனக்கு இந்த ஒரு டாக்டர் ராதாகிருஷ்ணனைத் தெரியுமிங்கிற, சரி போகட்டும்! உனக்கு காக்கா ராதாகிருஷ்ணனைத் தெரியுமா?

தாளமுத்து      :     என்னப்பா இது? நான் டாக்டர் ராதாகிருஷ்ணனைத் தெரியுமான்னு கேட்டா, நீ திருப்பி காக்கா ராதாகிருஷ்ணனைத் தெரியுமாங்கிற? ஒன்னும் புரியலியே! இந்தக் காக்கா ராதாகிருஷ்ணங்கிறது யாரு?

சாம்பல் சிவம் :    இந்த ஒரு ராதாகிருஷ்ணனுக்கே அசந்துட்ட. இன்னும் எத்தன எத்தன கிருஷ்ணனை எனக்குத் தெரியும், தெரியுமா?

தாளமுத்து       :    சரி, இந்த காக்கா ராதாகிருஷ்ணன் யாரு?

சாம்பல் சிவம்  :     அப்படிக் கேளு. இவரு சினிமா நடிகரு, குறிப்பிட்டு சொல்லனுமினா, இவரு மனோகரா படத்தில வசந்தசேனை கதாபாத்திரத்துக்கு மகனா நடிச்சிருக்காரு. பாத்தீங்களா சார்! இது கூடத் தெரியல, ம்…டைரக்டர் கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா?

தாளமுத்து      :       தெரியாது!

சாம்பல் சிவம் :        சரி போகட்டும். N.S கிருஷ்ணன், S.C கிருஷ்ணனைத் தெரியுமா?

தாளமுத்து      :     N.S  கிருஷ்ணனை கலைவாணர்னு சொல்லுவாங்க அவரைத் தெரியும். S.C  கிருஷ்ணனைத் தெரியாது!

சாம்பல் சிவம் :    S.C  கிருஷ்ணன்  சினிமாவிலே பிரபல பின்னணிப் பாடகர். இதெல்லாம் தெரியல; என்னைப் போட்டு கேட்டுட்ட?

தாளமுத்து      :      நீ தெரிஞ்சு வச்சிருக்கிறதைப் பாத்து, நீ தான் பெருமைப் பட்டுக்கிடனும்.

சாம்பல் சிவம் :       எதுக்கு அப்படிச் சொல்லுற?

தாளமுத்து      :      பின்னே என்னப்பா? நான் குடியரசுத் தலைவரைப் பத்தி சொல்லுதேன். நீ என்னடான்னா சினிமாவிலே நடிச்சவன், படிச்சவனப் பத்தி சொல்லுத!

சாம்பல் சிவம் :     சினிமா ஒன்னும் லேசு கிடையாது. இதுல வர்றவங்கதான் எல்லோருக்கும் தெரியும். உதாரணமா, மயிலேறி வர்ற வடிவேலனைத் தெரிஞ்சதை விட, சினிமாவில வர்ற வடிவேலத் தெரிஞ்சவங்கதான் அதிகம்!

புதியவர்           :      தம்பி நீங்க நிறைய கிருஷ்ணனைத் தெரிஞ்சிருக்கீங்க. சந்தோஷம்! ஆனால், அவங்கள விட டாக்டர் ராதாகிருஷ்ணன் ரொம்ப சிறப்பானவரு. அவரைப் பத்தி சரியாத் தெரியாததனாலத் தான் இப்படிச் சொல்லுதீங்க.

சாம்பல் சிவம் :    ஆமா அண்ணாச்சி, எனக்கு அவரைப் பத்தி ஒன்னும் தெரியாது.

புதியவர்            :     காலண்டருல அவர் பிறந்த நாளுன்னு போட்டு, அந்த நாளை ஆசிரியர் தினமுனு போட்டிருந்தா அவரு எவ்வளவு முக்கியமான ஆளா இருந்திருக்கணும், இல்லியா?

சாம்பல் சிவம் :    ஆமா அண்ணாச்சி, காலண்டர்ல போடணுமின்னா ரொம்ப முக்கியமான ஆளா இருந்தா தான் போடுவாங்க. அதெக்கூட நினைக்க எனக்கு விபரம் இல்லியே?

புதியவர்           :      பரவாயில்ல, தெரியலேன்னா தெரிஞ்சிக்கிடலாம்.

சாம்பல் சிவம் :    அண்ணாச்சி, அவரைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சுக்கிடுதோம்.

புதியவர்           :    ஓ கண்டிப்பா சொல்லுதேன். தம்பி, அவரு பிறந்த ஊர் திருத்தணி.

சாம்பல் சிவம் :    ஏ, தாளமுத்து, சின்ன வயசுல நம்ம கூடப் படிச்ச மாரிமுத்து திருத்தணியிலே போய்ப் பலகாரக் கடை போட்டு, இப்பப் பெரிய பணக்காரனா பிழைக்கிராமுன்னு சொல்றாங்களே அந்த திருத்தணி தானா?

தாளமுத்து     :      ஏலே அதேவூர்தாம்லே அண்ணாச்சி சொல்ற ஊரு

புதியவர்           :      உங்க ஊர்க்காரரு திருத்தணியிலே இருக்காரா?

தாளமுத்து     :     இருக்காரு சார்.

புதியவர்           :     அந்த திருத்தணியிலே வீராச்சாமி என்பவருக்கும், சீதம்மாள் என்பவருக்கும் 1888 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி இவர் பிறந்தார்.

சாம்பல் சிவம் :    ம்.. பிறகு?

புதியவர்           :    சாதாரண நிலையிலிருந்த இவர் முதல்லே திருத்தனியிலும் பிறகு திருப்பதியிலும் படிச்சாரு!

சாம்பல் சிவம் :    அப்படியா, பிறகு?

புதியவர்          :    சென்னையிலே உயர் கல்வி படிச்சு நிறைய படிப்பு பட்டங்கள் வாங்கி சென்னை மாநிலக் கல்வி துணைப் பேராசியராக உயர்ந்தார்.

சாம்பல் சிவம் :    அடேயப்பா! அப்படியா?

புதியவர்            :      பிறகு அதே கல்லூரியில் தத்துவப் பேராசிரியரானார்

சாம்பல் சிவம் :    தத்துவப் பேராசிரியரா? ஆச்சிரியமா இருக்கே!

புதியவர்           :      அது மட்டுமில்ல, அதையடுத்து மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியரானர்.

சாம்பல் சிவம் :    அங்கேயும் போயிட்டாரா?

புதியவர்           :      இவரது பெருமையை அறிந்து இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களும் அவர் தங்கள் பல்கலைக் கழகத்தில் இருந்தால் பெருமை வரும் என்று நினைத்து எல்லாரும் அழைத்தார்கள்.

சாம்பல் சிவம் :    இருக்காதா பின்னே?

புதியவர்           :    ஆனால் இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சென்று பணியாற்றினர். இவரால் ஆசிரியப் பணியே பெருமையடைந்தது.

சாம்பல் சிவம் :    புருஷன் பூமி ஆண்டா பொண்டாடிக்குப் பெருமைதானே. அது மாதிரி இவராலே ஆசிரியப் பணிக்கே பெருமைதான்.

புதியவர்           :     இன்னும் கேளுங்க, பிரிட்டிஷ் அதாவது இங்கிலாந்து இருக்குதுல்ல, அங்குள்ள பிரிட்டிஷ் அகாடமியிலே இவரது படிப்பு சிறப்பு எல்லாம் அறிந்து பேசும்படி செய்தார்கள்.

சாம்பல் சிவம் :    ஆத்தாடியோ, பிரிட்டீஸ்காரன் வேற கூப்பிட்டு பேசச் சொன்னானா?

புதியவர்         :      இவர் பேசியதுலேயும் ஒரு முக்கியம் இருக்குது, அதாவது ஆசியாக் கண்டத்திலிருந்து பிரிட்டீஸ் அகாடமியில் பேசிய முதல் மனிதர் இவர் தான்.

சாம்பல் சிவம் :    என்ன அண்ணாச்சி இவ்வளவு பெருமை இருக்கா?

புதியவர்            :     இது மட்டுமா?

சாம்பல் சிவம் :    அப்ப இன்னும் இருக்கா?

புதியவர்           :     உலகப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் சேர்ந்து இவருக்கு பதினேழு முறை டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்க.

சாம்பல் சிவம் :    பதினேழு முறையா! ஒவ்வொருத்தனும் ஒரு தடவை வாங்குனதை வச்சிக்கிட்டு என்னா வரத்து வாரான்?

புதியவர்           :      தம்பி இவரு ஆசிரியப் பணி மட்டும் செய்து உயர்வடையலே

சாம்பல் சிவம் :    அப்ப ஏதும் இதோடு சேர்ந்து வியாபாரம் கீபாரம் செய்தாரா?

புதியவர்           :     அப்படியெல்லாம் ஒன்னும் செய்யலே, மகாத்மா காந்தி, நேரு இவர்களோடு சேர்ந்து நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்.

சாம்பல் சிவம் :    என்ன அண்ணாச்சி, அந்தக் காலத்து அடைமழை மாதிரி அடுத்தடுத்து சொல்லிகிட்டே போறீக. சுதந்திரத்துக்கு வேற போராடினாரா?

புதியவர்           :     இரண்டு முறை இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக இருந்தார். 1962ல் இந்தியக் குடியரசு தலைவரானார்.

சாம்பல் சிவம் :    என்னன்னே ஒரு மனுஷனுக்கு இவ்வளவு சிறப்பான்னே?

புதியவர்            :   இவர் எவ்வளவு உயர்ந்தாலும், தான் ஒரு ஆசிரியர் என்பதை மறக்காமல், ஆசிரியர் என்று சொல்வதிலே தான் பெருமையும் மகிழ்வும் அடைந்தார். அதனால்தான், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடணும்னு விரும்பினார்.

சாம்பல் சிவம் :    நல்ல விருப்பம் தான், நாமும் கட்டாயம் கொண்டாட வேண்டியது தான். அப்பத்தானே இப்பேர்ப்பட்ட நல்லவங்களை நினைக்க முடியும்.

புதியவர்            :    இவர் 1975ல் ஏப்ரல் மாதம் 17ம் நாள் இறந்தார்.

சாம்பல் சிவம் :    எப்பேர்ப்பட்ட ஆளு, இறந்து போயிட்டாரா? வருத்தமாத்தான் இருக்கு. இருந்தா இவரு மாதிரி இருக்கணும், நானெல்லாம் இருந்து என்ன செய்ய, நான் இருக்குறதெல்லாம் சோத்துக்கு கேடு தான்.

கடைக்காரர்     : ஏலே கேடுலேயும் கேடு பெருங்கேடுல!

சாம்பல் சிவம் :    ஆமா, நீ என்னம்மோ சந்திரனுக்கு ராக்கட் விட்டவன் மாதிரி பேசுற, உனக்கு இந்தச் சட்டி தவிர என்ன தெரியும். அண்ணாச்சி இப்பேர்ப்பட்ட நல்லவங்கள நாடு மறக்கக் கூடாது தான்.

புதியவர்           :      மறக்காம நினைக்கனும்னு தான் அரசு இவர் பிறந்த நாளை இவரது விருப்பப் படி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருது.

சாம்பல் சிவம் :       அதுக்குத் தான் இந்தக் காலண்டர் தாளுள்ளே ஆசிரியர் தினமுனு போட்டிருக்கா?

புதியவர்            :      ஆமாம் தம்பி! இவர் பிறந்த நாளை அரசு ஆசிரியர் தினமுனு அறிவிச்சுக் கொண்டாடுறதோட அந்த நாளிலே மத்திய அரசும், மாநில அரசும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு நல்லாசிரியர் விருதும் கொடுத்து சிறப்பிக்கிறது.

சாம்பல் சிவம் :        அப்படியா சங்கதி, செய்ய வேண்டியதைத் தான் செய்திருக்காங்க!

புதியவர்            :        தமிழக அரசு 1997ம் ஆண்டு முதல் இவ்விருதை இவர் பெயராலேயே அதாவது ‘’டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’’ என்றே கொடுத்து வருகிறது.

சாம்பல் சிவம் :        ரொம்பப் பொருத்தம், இப்படித்தான் கொடுக்கணும்.

புதியவர்           :     இன்னொன்னு கேளுங்க, சென்னையிலே கடற்கரையிலே இருந்து அண்ணா மேம்பாலம் வரையுள்ள சாலைக்கு இவர் பேரைத்தான் அரசாங்கம் வச்சிருக்கு.

சாம்பல் சிவம் :        இதனாலே தான் அந்த ரோட்டுக்கு இந்தப் பேரு வச்சாங்களா. நான் மெட்ராசுல மளிகைக் கடையிலே சம்பளத்துக்கு இருக்குற போது ஒரு நாளைக்கு எத்தனை தடவை அந்த ரோட்டில சைக்கிள்ள போவேன் தெரியுமா? அப்பெல்லாம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைங்கிறது தெரியுமேயொழிய அதுக்கான காரணமெல்லாம் தெரியாது.

புதியவர்           :          மாநில அரசு இது செய்ததா மத்திய அரசு நம் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘’பாரத ரத்னா’’ என்ற விருதைக் கொடுத்து சிறப்புச் செய்தது.

சாம்பல் சிவம் :        அடேயப்பா, எத்தனை விருதுகள் வாங்கியிருக்காரு. அண்ணே இதுவரை இவரைப்பத்தி ஒன்னும் தெரியாம இருந்தேன். நீங்க வந்த நல்ல நேரம், டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பற்றி நிறைய விபரம் தெரிஞ்சுக்கிட்டேன்.

புதியவர்           :     ரொம்ப சந்தோசம்!

சாம்பல் சிவம் :    அதனால நீங்க குடிச்ச டீக்கு நான்தான் காசு கொடுப்பேன். ஏ, காளிமுத்து அண்ணாச்சிட்ட காசு வாங்காத. நான் தாரேன்.

புதியவர்          :   அதெல்லாம் வேண்டாம். நீங்க இவ்வளவு நேரமும் பொறுமையா இருந்து ஆர்வமாக் கேட்டீங்களே, அதுக்கு நான் தான் நீங்க குடிச்ச டீக்கும், சேர்த்தும் கொடுக்கணும். ஐயா, கடைக்காரரே இந்தாங்க நான் குடிச்ச டீக்கும், இவங்க குடிச்ச டீக்கும் சேத்து காசை எடுத்துக்கோங்க.

கடைக்காரர்   :     ஏங்கடையிலே ஆசிரியர் தினமான இன்னிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பத்தி இவ்வளவு தெளிவா நீங்க ரெண்டு பேரும் பேசுனீங்களே! அதை மத்தவங்களும் கேட்டுகிட்டு இருந்ததில்லாம, நானும் டீ காப்பி போட்டுக்கிட்டே கேட்டுகிட்டுதான் இருந்தேன். அதனால, இந்த நல்ல காரியத்துக்காக நீங்க ரெண்டு பேர் குடிச்ச டீக்கும் நான் காசு வங்கல. அது மட்டும் இல்ல இதைக் கேட்டுக்கிட்டு இருந்த மத்தவங்களுக்கும் காசு வாங்கலே, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரைச் சொல்லி உங்க எல்லோருக்கும் என் சப்பளை. (புதியவரைப் பார்த்து) அண்ணாச்சி இந்தப் பக்கம் வந்தா மறக்காம நம்ம கடைக்கு வந்துட்டுப் போங்க.

புதியவர்       :    கண்டிப்பா வாரேன். சரி போயிட்டு வரட்டுமா?

எல்லோரும் :      நல்லது! நன்றிங்கையா.

* * *

பொன் விழா நாயகருக்கு வாழ்த்து!

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

samy annaraj,sjத்திரகொண்டான் அன்னராஜ் – முத்துமரி அவர்களின் அன்புப் புதல்வனாகப் பிறந்து பிரான்ஸ் நாட்டில் சேசுசபைத் துறவியாகக் குருப்பட்டம் பெற்று மொரீசியஸ் மற்றும் ரியூனியன் தீவுகளில் ஐம்பது ஆண்டுகாலப் பணியாற்றி இன்று “பொன்விழா” காணும் எங்கள் அன்புக்குரிய தந்தை அந்தோணிசாமி அவர்களுக்கு வாழ்த்துப் பா!

              கத்தும் நீரலை நித்தம் ஆடும்

                         கடல்தரு வலம்புரி கவின்மிகு முத்தென

              சுத்தும் கோள்கள் மத்தியி லிருந்து

                         சுடர்விடு அணையா பேரொளி ரவியென

              வித்துனு ளிருந்து விரிகிளை பரப்பி

                         விண்தொட வளரும் மாபெரு மரமென

              முத்துமரி அன்னராசு உத்தமர் தவத்தால்

                        முத்தார மாய்வந்த புத்திரா போற்றி!

              மரிபெற்ற மகன்பணி மண்ணுலகு செய்ய

                        முத்துமரி பெற்ற மூத்தவர் தாமும்

             அரிய தியாகம் அவனிக்குச் செய்யும்

                        அருட்பெ ரும்சேசு சபையில் சேர்ந்து

             பரிசிலெனப் பணிஐம்ப தாண்டு கடந்து

                        பரிமள மானஎம் அந்தோணி சாமிக்கு

             பெரிய தங்கை குடும்பம் மகிழ்வில்

                       பொன்னடி யாம்உன் அடிவணங் கினோமே!

“வாழ்த்துப் பா” விளக்கம்:

ஓசை எழுப்பும் நீர் அலைகள் தினமும் ஆடுகின்ற கடலில் உள்ள வலம்புரிச் சங்கில் பிறந்த அழகிய முத்தைப் போன்றவரே; வான் வெளியில் சுற்றும் கோள்களுக்கெல்லாம் மத்தியில் இருந்து அணையாமல் பேரொளி வீசுகின்ற சூரியனைப் போன்றவரே; சிறு விதையினுள் இருந்து கிளைகளை விரித்து விண்ணைத் தொடுமளவு வளரும் மிகப் பெரிய மரம் போன்றவரே; உண்மை வழியில் வாழ்ந்த பெற்றோர் முத்துமரி – அன்னராஜ் தவத்தால் முத்தாரமாய்ப் பிறந்த புதல்வரே; உம்மைப் போற்றுகின்றோம்!

கன்னி மரியாள் பெற்றெடுத்த இறை இயேசு ஆற்றிய பணியை இவ்வுலகிற்கு ஆற்ற, முத்துமரியின் மூத்த மகவாய்ப் பிறந்தவரே; இவ்வுலக மக்களுக்காக அரிய பல தியாகப் பணிகளைச் செய்யும் இயேசு சபைத் துறவிகளின் சபையில் நீவிரும் சேர்ந்து, இவ்வுலக வாழ்வில் துன்பத் தெப்பத்தில் தத்தளிப்பவர்களை, இயேசுவின் பதம் அழைத்துச் செல்ல ஓடம் போன்று ஐம்பது ஆண்டுகள் பணியாற்றி, எங்கும் நறுமணம் பரப்பும் பரிமளம் போன்ற எம் அந்தோணிசாமி அவர்களே! உம்முடைய மூத்த தங்கை செட்டிகுறிச்சி குழந்தை திரேஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வாழ்த்தி, உம்முடைய பொன் போன்ற பாதங்களை வணங்குகின்றோம்!

அருட்தந்தை அந்தோணிசாமியுடன் தங்கை குழந்தை திரேஸ்

அருட்தந்தை அந்தோணிசாமியுடன்
தங்கை குழந்தை திரேஸ்

* * *

Ball – பால்

கதை : புலவர் அ. மரியதாஸ்செட்டிகுறிச்சி.

Ball – பால்

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட காலம் போய் இன்று நாம் சுதந்திரம் பெற்ற நாட்டவராக இருக்கின்றோம். யாரை விரட்ட வெகுண்டு வீரக் குரல் கொடுத்தோமோ, இன்று அவர்கள் நம்மிடையே இல்லை. ஆனாலும், அவர்களின் மொழி, உடை, நாகரீகம் என்று பல நிலைகளில் முன்னிலும் அதிகமாக, இன்று நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மொத்தத்தில் ஆங்கிலேயர்களாக மாற ஆவல் கொண்ட இந்தியர்களாக இருக்கிறோம். இத்தாக்கத்தில் தலையாய் நிற்பது அவர்களது மொழியைக் கற்க முயலும் கல்வி. அதுதான் ஆங்கிலக் கல்வி! இன்றது அருகு போல் பெருகி, நகர்ப்புறம் என்றில்லாமல் கிராமப்புறம் வரை எங்கும் பரவி விட்டது.

அதனால், வளமையில் வாழ்பவர்கள் முதல் வறுமையில் வாடுபவர்கள் வரை தம் பிள்ளை ஆங்கிலம் கற்றாலே வாழும்; தமிழ் கற்றாலோ தாழும் எனவும்; அரசு தரும் இலவசக் கல்வி இகழ்ச்சிக் கல்வி; பணம் கட்டிப் பயிலும் கல்வியே பயன் தரும் கல்வியென நினைக்கின்றனர். இந்நினைப்பின் செயலாய் முற்றத்தில் விளையாடி மகிழ வேண்டிய மூன்று வயதுப் பிள்ளையின் முதுகில் புத்தக மூட்டை கட்டி முகமலர்ச்சியோடு ஆங்கிலம் கற்க அனுப்புகின்றனர். இதற்குப் பாலசரஸ்வதி மகன் பாலுச்சாமியும் விலக்கல்ல.

பாலாமடை என்ற ஊரில் பாலசுப்பிரமணியம் என்று ஒருவர் இருந்தார். கூலி வேலை செய்து கிடைக்கும் குறைந்த கூலியைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். மூத்தவள் பெயர் பாலம்மாள், இளையவள் பெயர் பால சரஸ்வதி.

மூத்தவளாகிய பாலம்மாளை பக்கத்து ஊரான, பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலக்குறிச்சியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவளுக்கு திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளாகியும் பிள்ளை இல்லை. ஆகவே, கவலை கொண்டவளாய் வாழ்ந்தாள்.

பாலம்மாளின் கவலையறிந்த பக்கத்து வீட்டுப் பத்மா அவளிடம், “நீ பத்து நாள் பத்தி, பூ, பழம் வைத்து பக்தியாய், சுத்தமாய் விரதமிருந்து பாலமுருகன் கோவிலுக்குப் பால்குடம் எடுத்தால் பாலகன் உனக்குப் பிறப்பான்” என்றாள். அதன்படியே அவளிருக்க அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்தது. அது இப்போது பத்து மாதக் குழந்தையாக இருக்கிறது.

இளையவளான பால சரஸ்வதிக்கு உள்ளூரான பாலாமடையில் திருமணமாகியிருந்தது. திருமணமான அடுத்த ஆண்டே ஆண் குழந்தையொன்று பெற்று ‘பாலுச்சாமி’யெனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தாள். அவனை எல்லோரும் ‘பாலு, பாலு’ என்றே கூப்பிடுவர். அவனுக்கு மூன்று வயது ஆனதும் அவ்வூரிலுள்ள ‘வெள்ளையன் மெட்ரிக்குலேஷன் பள்ளி’யில் வெள்ளையர் (ஆங்கிலக்) கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அவன் இப்போது LKG முடித்து, UKG படித்து வருகிறான். காலையில் பள்ளி வாகனத்தில் செல்பவன், மாலை நான்கு மணிக்குத் தான் வீடு வருவான். வந்ததும் கை கால்களைக் கழுவி சுத்தம் செய்து தன் மகனுக்கு தின்பண்டம் கொடுத்து காப்பியும் கொடுப்பாள் பால சரஸ்வதி. அவனும் அம்மாவுடன் சிறிது நேரம் ஓய்வாக இருந்து விட்டு, சுமார் ஐந்து மணியளவில் தெருவில் விளையாடப் போவான்.

அப்போது, இவன் வயதொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து தானும் பந்து வைத்து விளையாட அம்மாவிடம்,      ‘அம்மா பாலு’ என்பான். (ஆங்கிலக் கல்வி கற்பதால் பந்தைப் ‘பாலு’ என்று சொல்லியே அவனுக்குப் பழக்கம்). அவளும் உயரத்தில் மறைத்து வைத்திருக்கும் பந்தை எடுத்துக் கொடுப்பாள். அவனும் பந்தை வாங்கிக் கொண்டு பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு தெருவில் விளையாடுவான். சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் விளையாடி விட்டு, அம்மாவிடம் வந்து பந்தைக் கொடுத்து விட்டு, பாடங்களை எழுதுவதும் படிப்பதுமாக இருப்பான். இது தினம் நடக்கும் செயல்.

இது இவ்வாறிருக்க, அக்காள் பாலம்மாள் தன் தாய் தந்தையையும், தங்கையையும் பார்த்து வரலாமென்று பாலக்குறிச்சியிலிருந்து பாலாமடைக்கு தன் பத்து மாதக் குழந்தையுடன் வந்தாள். வந்து இரண்டு மூன்று நாள் இருந்து எல்லோரையும் பார்த்தாள். அப்போது, அரையாண்டு விடுமுறை நேரம். ஆகவே, பாலுச்சாமி லீவில் இருந்ததால் பெரியம்மாவுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டான்.

மூன்று நாட்கள் கழித்து, அக்கா பாலம்மாள் தன் ஊருக்குச் செல்லப் புறப்பட்டாள். பெரியம்மாவோடு பிரியமாகப் பழகிய பாலுச்சாமி பெரியம்மாவைப் பிரிய மனமில்லாமல், “நானும் கூட வருகின்றேன்” என்றான். ஏற்கனவே, அவளும் இவனை லீவு முடியும் வரை தன்னோடு ஊருக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்திருந்தாள். ஆகவே, தங்கச்சி பாலசரஸ்வதியிடம், “ஏடி! நான் லீவு முடியும் வரை, இவனை எனதூருக்கு கூட்டிக் கொண்டு போகிறேன். லீவு முடியும் போது நான் கொண்டு வந்து விடுகிறேன். இல்லையேல், நீ வந்து கூட்டிச் செல்” என்றாள். அதற்குத் தங்கச்சி, “தாராளமாய் கூட்டிக் கொண்டு போக்கா. லீவு முடியும் போது நானே வந்து கூட்டிச் செல்கிறேன், நீ ஒன்னும் இன்னொருதரம் அலைய வேண்டாம்” என்றாள். பின், தன் மகனுக்கு வேண்டிய சட்டைகள் சிலவற்றை எடுத்து அக்காளிடம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். அக்காள் பாலம்மாள் தன் மகனை இடுப்பிலும், தங்கச்சி மகனை கையில் பிடித்துக் கொண்டு பஸ் ஏறி பாலக்குறிச்சி வந்து சேர்ந்தாள்.

மறு நாள் மாலை ஐந்து மணிக்கு பாலுச்சாமிக்கு தன் ஊரில் பந்து வைத்து விளையாடுவது ஞாபகத்திற்கு வரவே, தன் அம்மாவிடம் பந்து கேட்பது போன்று பெரியம்மாவிடம் கேட்போம் என்று நினைத்து வந்து அவள் முன் நின்றான். அப்போது பெரியம்மா தன் பத்து மாதக் குழந்தையைக் குளிப்பாட்டித் துணியால் துடைத்து தூணில் சாய்ந்து தாய்ப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தங்கச்சி மகன் ஏதோ கேட்க தன் முன் நிற்கிறான் என்பதை அறிந்த பெரியம்மா, “என்னடா வேணும்?” என்று கேட்டாள்.

பந்தைப் பாலு என்று சொல்லிப் பழகிய இவன், பால் கொடுத்துக் கொண்டிருந்த பெரியம்மாவிடம், “பாலு வேணும்” என்றான். பந்தைப் பால் என்று சொல்வார்கள் என்பது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பெரியம்மாவுக்கு தெரிந்திருந்த போதும், இப்போது தன் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்த சமயத்தில் கேட்டதால், அவன் தான் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலைத்தான் கேட்கிறான் என்று நினைத்து அதிர்ச்சியடைந்தாள்.

இருந்தாலும் சின்னப் பயல் ஏதோ தெரியாமல் கேட்கிறான் என்றெண்ணி மீண்டும் அவனைப் பார்த்து, “என்னடா வேணும்?” என்றாள். இதைக் கேட்ட அவன் அடுத்த வினாடியே, “எனக்குப் பாலு தான் வேணும்” என்றான். இவ்வாறு பால் வேண்டுமென பாலு சொன்ன பதிலைக் கேட்டு பாலம்மாள் படபடத்துப் போனாள். இருந்தாலும் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு இவன் எண்ணத்தை மாற்றுவோம் என்று நினைத்து பாலுவைப் பார்த்து, “நீ ரொம்ப நல்ல பிள்ளையாம், பெரியம்மா சொல்றதைக் கேக்கணுமாம்” என்று புகழ்ந்து கூறி, “உனக்கு நிறைய காசு தாரேன்! கெட்டிக்காரப் பையனா ஓடிப்போயி கடையில் நிறைய சாக்லேட் மிட்டாய் வாங்கிச் சாப்பிடு” என்றாள்.

காசு கொடுப்பேன் என்று சொன்னதைக் காது கொடுத்துக் கேளாமல், “பெரியம்மா எனக்குப் பாலு தான் வேணு”மென கராராகச் சொன்னான் பாலு. இதைக் கேட்டதும் பெரியம்மாவிற்கு தலை சுற்றியது. கிணறு வெட்ட பூதம் வந்த கதை என்று சொல்வது இது தானோ எனவும், ‘தந்தையானாலும் தாய்ப்பாலை தனித்திருந்து கொடு’ என ஒரு புது மொழி, பழமொழியாகச் சொல்லலாம் போல் தோன்றுகிறது என்றும் நினைத்தாள். முடிவாக, இவனைச் சொல்லி என்ன செய்ய முழுமாட்டில் அரைமாடு வளர்ந்துள்ள இந்தப் பயலுக்குப் பால் கொடுத்துப் பழக்கம் செய்திருக்கிறாளே, அவளைத் தான் சொல்ல வேண்டுமென்று மனதில் சொல்லிக் கொண்டு, அவனிடம், “உங்கம்மா உனக்கு பால் கொடுப்பாங்களா?” என்றாள்.

“ஆமாம்! நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு எனக்குக் கொடுப்பார்கள்” என்றான். “சரி! கொஞ்சம் பொறு” என்று சொல்லி விட்டு, செல்போனை எடுத்து தங்கை பாலசரஸ்வதிக்குப் போன் செய்தாள் பாலம்மாள்.

இப்படி இவள் போன் செய்யும் போது, பாலாமடையில் தங்கை பாலசரஸ்வதி தன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்து வீட்டு சிறு பிள்ளைகள் பந்து வைத்து தெருவில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளைகளுடன்தான் தன் மகனும் சேர்ந்து விளையாடுவான் என நினைக்கும் போது, தன் போன் ஒலிக்கும் ஒலி கேட்டது. வீட்டினுள் சென்று போனை எடுத்துப் பார்த்தாள். அக்காள் போட்டிருப்பதை அறிந்து, “என்ன அக்கா! நீ நல்லா இருக்கியா? மச்சான் எப்படியிருக்காக? பிள்ளைகளெல்லாம் நல்ல இருக்காங்களா?” என்றாள்.

அதற்கு அக்காள், “இங்க எல்லோரும் நல்லாத் தான் இருக்கோம், சரி! அது போகட்டும், நீ என்னடி பிள்ளையை இப்படி வளர்த்திருக்க?” என்றாள். அதற்குத் தங்கை, “என்னக்கா நல்லாதானே வளர்த்திருக்கிறேன், ஏதும் சேட்டை கீட்டை செய்தானா?” என்றாள். அதற்கு அக்காள், “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை” என்றாள். “பின்ன என்னக்கா செய்தான்?” என்றாள். “அடியே! அவன் என்னிடம் பால் கேட்கிறான். நீ அவனுக்கு பால் கொடுப்பாயா?” என்றாள். ஏற்கனவே தெருவில் பிள்ளைகள் பந்தை, ‘பால் பால்’ எனச்சொல்லி விளையாடிக் கொண்டிருந்ததால், அக்காள் பால் எனச் சொன்னதற்கு பந்து என்று நினைத்துக் கொண்டு, “ஆமக்கா பள்ளிக்கூடம் விட்டு வந்தபின்பு கொடுப்பேன், உன்னிடம் இருந்தால் நீயும் கொடு” என்றாள்.

“அய்யய்யோ! இவளென்ன பெரும் மடச்சியாக இருக்கிறாளே? தாத்தாவுக்குத் தப்பாத பேத்தி இவள் தான். அந்தக் காலத்தில் தாத்தா, அவுக அம்மாட்டே எட்டு வயது வரை பால் குடித்ததாகச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது போல் இவளும் நம் குடும்பத்தில் வந்து சேர்ந்து விட்டால் போலிருக்கிறது. இருந்தாலும் இவள், இவளது மகனுக்கல்லவா என்னை பால் கொடுக்கச் சொல்கிறாள்” என்று நொந்து கொண்டு, “அடியே! இருக்குதடி இருக்குங்கிறதுக்காக எப்படியடி கொடுக்க முடியும்?” என்றாள். அதற்கிவள், “அக்கா, இருந்தா பிள்ளைகளுக்கு கொடுக்காமே, நாமே வச்சிருந்து என்னக்கா செய்யப் போறோம்? சும்மா கொடுக்கா” என்றாள். அதற்கு அக்காகாரி, “அடியே! ஏம் பிள்ளைக்கீனுள்ள இதையெல்லாமா ஓம்பிள்ளைக்குக் கொடுக்கிறது?” என்றாள்.

உடனே தங்கச்சி, “என்னக்கா இப்படி ஓம்பிள்ளே ஏம்பிள்ளேன்னு பிரிச்சுப் பேசுறே? ரெண்டு பிள்ளையும் ஒன்னு போல நினைக்கா, நானெல்லாம் அப்படித்தான் நினைக்கேன். “ஓம் பிள்ளே பெரியவானாகி ஏண்டே வாரானு வை, அப்ப ஏண்டே இருந்தால் கண்டிப்பாக அவன் கேளாமலே நான் கொடுப்பேன்” என்றாள். எல்லாம் என் தலை விதி. இப்படி கூறுகெட்ட கூமுட்டை கூடப்பிறந்தவளாக எனக்கு சேர்ந்து விட்டாலே என்று நினைத்துக் கொண்டு, “அடியே! நான்கு வயதான பெரிய பயலுக்கு பள்ளிக் கூடம் விட்டு வந்ததும் நீ கொடுப்பதே தவறு” என்றாள். அதற்கு தங்கச்சி, “அக்கா இவன் பெரிய பயல், இவனுக்கு பள்ளிக் கூடம் விட்டு வந்ததும் கொடுப்பது தவறு என்கிறாயே, ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும் தெரியுமா” என்றாள். “என்னடி நடக்கும்?” என்றாள் அக்காகாரி.

அதற்கு இவள், “அக்கா, ஞாயிற்றுக்கிழமையினா இவன் அப்பா வேலைக்குப் போகாம வீட்டில் இருப்பாகளா, அவுகளும் கேப்பாக” என்று சொன்னாள். இதைக் கேட்ட அக்காளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போலானது. “கர்மம்! கர்மம்! இப்படியொரு கேணச்சி தங்கச்சியாக உலகில் யாருக்கும் இருக்க மாட்டார்கள்” என்று வருந்திக் கொண்டிருக்கும் போது தங்கச்சிக்காரி, “என்னக்கா! பதில் பேசாம இருக்க? இன்னும் கொறையும் கேளு, இவன் அப்பா கேட்டவுடன் பாலு கொடுப்பேனா, அதை வாங்கி தகப்பனும் மகனும் உருட்டி உருட்டியும், பிறகு அந்தப் பந்தை மேல போட்டுப் போட்டு ‘கேச்’ பிடித்தும் விளையாடுவாங்க. ஞாயிற்றுக்கிழமையினா ஒரே விளையாட்டாதான் இருக்கும்” என்றாள்.

இப்போது தான் அக்காளுக்குத் தங்கச்சி மகன் ‘பால்’ எனக் கேட்டது ‘பந்தைத்தான்’ எனவும், அதைத் தொடர்ந்து தங்கை பேசியதையும்; தான் தவறாகப் புரிந்து கொணடோமே! என்று நினைத்துக் கொண்டு தன் மகனுக்கு விளையாட வாங்கி வைத்திருந்த பந்தை எடுத்துக் கொடுத்தாள். பாலும் ‘பாலை’ வாங்கிக் கொண்டு விளையாட ஓடினான்.

சொல்லுக்கு பொருள் சூழ்நிலையால் மாறும் என்றும், ‘ஆங்கிலப் பாலும்(Ball) தமிழ்ப் பாலும்’ தன்னைத் தவியாய் தவிக்க வைத்ததை நினைத்து சிரியாய் சிரித்தாள்.

* * *